முதற் கலீபாவின் பத்துக் கட்டளைகள்

படை வீரர்களுக்கு பத்துக் கட்டளைகள்:

இஸ்லாமிய ஆட்சியின் முதற்கலீபா ஹஸ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் இஸ்லாமியப்படை வீரர்களை போர்க் களத்திற்கு வழி அனுப்புவதற்கு முன்னால் அவ்வீரப் பெருமக்களை ஒன்று கூட்டி பின்வருமாறு உபதேசிப்பார்கள்.

1. தளபதிக்கு அடிபணியுங்கள்.
2. நீதிநெறியிலிருந்து பிறழாதீர்கள்.
3. பிறரை ஏமாற்றாதீர்கள், கொடுத்த வாக்கை மீறாதீர்கள்.
4. பெண்கள், வயோதிகர், குழந்தைகள் ஆகியோரைக் கொல்லாதீர்கள், சித்திரவதை செய்யாதீர்கள்.
5. பயன்தரும் பழமரங்களை வெட்டாதீர்கள், அவற்றை எரிக்காதீர்கள், விளைநிலங்களைப் பாழ்படுத்தாதீர்கள்.
6. ஆடு, மாடு, ஒட்டகைகள் முதலான கால்நடைகளை உணவுக்கன்றி வேறு எந்த நோக்கோடும் கொல்லாதீர்கள்,   வதைக்காதீர்கள்.
7. லஞ்சம் வாங்கி உங்கள் கரங்களையும், சமுதாயத்தையும் கறைபடுத்தாதீர்கள்.
8. கோழைத்தனத்திற்கும், தோல்விமனப்பான்மைக்கும் என்றும் இரையாகாதீர்கள்.
9. 'பிஸ்மில்லாஹ்' கூறி உங்கள் உணவுகளை உட்கொள்ளுங்கள்.
10. மக்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அன்பாலும் மென்மையான மொழிகளாலும் அழையுங்கள். காபிர்கள் மீது கருணைக் காட்டுங்கள்.இவ்வாறு நெறிபோதனை அளித்துதான் இஸ்லாமியப் படைவீரர்களை களத்திற்கு அனுப்பி வைத்தார்கள் கலீபா அவர்கள்.

Courtesy : Al Baqavi

பெருமானாரின் பத்துக் கட்டளைகள்

பெருமானாரின் பத்துக் கட்டளைகள்

1417 ஆண்டுகளுக்கு முன் பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-

அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1. (மக்களே!) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும், கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது). இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2. (மக்களே!) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல, அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ, பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3. (மக்களே!) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும்,கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4. (மக்களே!) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.) முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5.  (மக்களே!) பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள்.. அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ, காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு, உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6. (மக்களே!) எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள!
ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை விடுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.

முதலாவது எனது திருவேதமான திருக்குர் ஆன்!
இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7. (மக்களே!) எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.

ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திறகுச் செல்வீர்கள்.

8. (மக்களே!)  உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள்.. அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். (எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீகள்)

9. (மக்களே!) அறிந்து கொள்ளுங்களஉங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்டோரைத்தவிர, அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர், குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்). சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10. (மக்களே!)  இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?
'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்!.' அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி. இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி',  அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!

இறைவா! நீயேஇதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.
மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர். (ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி, முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர், இப்னுஹிஷம், ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்).

Courtesy : albaqavi.com

“படைத்தவனே, எந்தத் தாய்க்கும் தந்தைக்கும் இந்த நிலை வரக்கூடாது..! "

'எதற்காக எங்கள் மகனை இப்படிக் கொல்லாமல் கொல்கிறார்கள்? அவன் குற்றவாளிதான் என்றால் தாராளமாகத் தண்டியுங்கள். ஆனால் குற்றம் நிரூபணமாகும் வரை ஜாமீன்கூட மறுக்கப்படுவது காட்டு நீதியல்லவா?'

 இப்படிக் கேட்பவர்கள் அப்துந் நாஸர் மஅதனியின் தந்தை டி.. அப்துஸ்ஸமத் மாஸ்டரும் அவருடைய மனைவி அஸ்மாபீவியும்தான்.


"
கோவையில் விசாரணைக் கைதியாக எங்கள் மகனை ஒன்பதே கால் வருடம் சிறையில் அடைத்திருந்தார்கள். இறுதியில் குற்றவாளியல்ல என்று தீர்ப்பளித்து நீதிமன்றம் அவனை விடுதலை செய்தது. சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் ஒரு வாழ்க்கையைத் தொடங்குவதற்குள் பெங்களூரு போலீஸ்  வந்து அவனைக் கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டது. பிணையில்கூட விடுவிக்காமல் அவனை ஏன் இப்படி அடைத்து வைத்திருக்கிறார்கள்? படைத்தவனே, இந்த உலகில் எந்தத் தாய்க்கும் எந்தத் தந்தைக்கும் இந்த நிலை வந்துவிடக்-கூடாது.."

 

 

எழுபத்து இரண்டு வயதான சமத் மாஸ்டரும் அஸ்மாபீவியும் மனம் உடைந்து அழுது பிரார்த்திக்கிறார்கள். ஓடித் தளர்ந்த இயந்திரம் போல் உள்ளார் இந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மகனுக்கு நீதி வேண்டி ஆண்டுக்கணக்கில் அதிகாரிகளின் அரண்மனைக் கதவுகளைத் தட்டிய சமத் மாஸ்டர், பக்கவாதம் வந்து

படுத்த படுக்கையில் ஆகிவிட்டார். அதனால் அப்துந்நாஸர் மஅதனியை பெங்களூரு போலீசார் அழைத்துச் சென்றதைக்கூட பல மாதங்களுக்குப் பின்புதான் அறிந்தார்

 

கோவை சிறையில் மஅதனி இருந்தபோது நீதிக்கான போராட்டத்தில் சமத் மாஸ்டர் முன்னணியில் இருந்தார்; ஆனால் இன்று நாற்காலியில் தளர்ந்தமர்ந்து கண்ணீர் விடத்தான் முடிகிறது. அடக்குமுறைகள், அநீதிகள் எனும் எத்தனையோ ஆழிப்பேரலைகளை எதிர்கொண்டதுதான் இந்தக் குடும்பம்.

 

பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதை ஒட்டி மஅதனியின் எஸ் எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது மாஸ்டரும் மனைவியும் தங்களின் பாரம்பர்ய வீட்டிலிருந்து வெளியேற வேண்டி வந்தது. வடமாநிலத்தைச் சேர்ந்த மாவட்டக் காவல்துறை அதிகாரியின் தலைமையில்தான் இவர்கள் வீட்டை விட்டு விரட்டப்-பட்டார்கள். அந்த வீடு பிறகு போலீஸ் கேம்ப் ஆக மாற்றப்பட்டது. அந்தக் கொடுமையை சமத் மாஸ்டர் நினைவு கூர்கிறார்:

 

"டிசம்பர் 13ஆம் தேதி போலீஸ் திடீரென்று வந்து வீட்டில் ரெய்டு நடத்தியது. நாற்காலிகளும் துணிகளும் தவிர வேறு எல்லாவற்றையும் வீட்டிலிருந்து அள்ளிக்கொண்டு போனது. பள்ளிக்கூடத்தில் நடந்த பேச்சுப்-போட்டிகளில் வெற்றி பெற்று அப்துந் நாசிர் வாங்கிய பரிசுப்பொருள்கள், சான்றிதழ்கள் எல்லாவற்றையும் போலீஸ் சின்னாபின்னமாக்கியது. இளைய மகன் அன்வர் ஹுசைனுக்கு அன்று ஒரு வயது. குழந்தையையும் தூக்கிக் கொண்டு உடனே வீட்டை விட்டு வெளியேறும்படி அவர்கள் அஸ்மாபீவியை அச்சுறுத்தினர்.

 

"மஅதனி தவிர ஏழு மக்களுடன் நாங்கள் அன்று இரவு வீட்டை விட்டு வெளியேறி நடு ரோட்டுக்கு வந்து விட்டோம். வீட்டை அன்று இரவே போலீஸ் சீல் வைத்து-விட்டது. கேம்ப் செயல்பாடுகள் தொடங்கிவிட்டன.

 

"பிறகு நான்கு ஆண்டுகள்  சொந்தக்காரர்கள் பலருடைய வீடுகளில் அபயம் தேடினோம். 1997இல் வீடு திரும்பக் கிடைத்தபோது ஒரு போர்க்களம் போல் இருந்தது. போலீசார் எங்கள் வீட்டுப் பரம்பைச் சின்னாபின்னப்படுத்தி இருந்தார்கள். தென்னை மரங்கள் எல்லாம் கருகிப்போய்க் கிடந்தன. காவல்துறையினரின் கலப்படமற்ற பொய்ச் செய்திகள் குறித்து எந்தப் பத்திரிகையும் ஊடகமும் கண்டுகொள்ளவே இல்லை. அதைப்பற்றி நாங்களும் கவலைப்படவில்லை. எங்களுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் எண்ணிப் பார்க்கும்போது இதெல்லாம் ஒன்றுமே இல்லை." சமத் மாஸ்டர் குரல் தழுதழுத்தது.

 

"1998 மார்ச் 31 அன்று ஆட்சேபணைக்குரிய வகையில் பேசினார் என்று கூறி கோழிக்கோடு கசபா காவல் துறையினர் மஅதனியைக் கைது செய்து கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிறகு பிணையில் வர அனுமதிக்காமல் ஒன்பது ஆண்டுகளும் நான்கு மாதங்களும் சிறையில் கழிந்தது. அச்சுதானந்தனும் உம்மன் சாண்டியும் வயலார் ரவியும் அவரவரின் தளங்களில் மஅதனி அனுபவிக்கின்ற எல்லையற்ற சிறைவாசப் பிரச்னையில் தலையிட்டனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இறுதியில்  கோவை அமர்வு நீதிமன்றம் மஅதனி குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது.

 

"அவனுடைய இளமைக்காலம் எல்லாம் சிறையிலேயே கழிந்தது.  இதோ, இப்போது மீண்டும் அவனைக் கைது செய்துள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்டு 17ஆம் நாள் அவனை பெங்களூரு போலீஸ் கொண்டு சென்றது. 47 வயதுதான் ஆகிறது என்றாலும் இன்று அவன் ஏராளமான நோய்களால் தாக்கப்பட்டுள்ளான். படைத்த இறைவன் மீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கைதான் எங்களைக் காப்பாற்றிவருகிறது.

 

"நான் அவனைக் கடைசியாகப் பார்த்தது பக்கவாதம் வந்து வீழ்ந்த அன்று காலையில்தான். அவனுடைய உம்மா அவனைப் பார்த்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. மஅதனியின் கண்பார்வை கிட்டத்தட்ட முழுவதுமாகப் போய்விட்டது என்று சொல்கிறார்கள். நீதி கிடைப்பதற்கு இனி என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தற்கொலை செய்துகொள்வதைக் குர்ஆன் தடுத்திருக்கிறது. இல்லையெனில் நாங்கள் எப்போதோ அந்த வழியைத் தேர்ந்தெடுத்திருப்போம்." ஆதரவற்ற இந்த முதிய தாய் தந்தையரின் கண்ணீருக்கு இந்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?

 

நன்றி - சமரசம் 

Posted by idealvision.info